Monday, 23 December 2019

அகஸ்தியர் ஞானம் - 4

ஞானம் - 4
..................................................................................................................................

பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
      பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
      கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
      மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
      வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.

..................................................................................................................................

ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
      அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்
      முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்;
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
      பேரான பூரணத்தை நினைவாய்க் காரு;
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
      வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே.

..................................................................................................................................

தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
      தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
      தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே
      ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்;
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்
      நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே.

..................................................................................................................................

பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்
      பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
      உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
      தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
      உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே.

..................................................................................................................................

பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
      பரிபாடை யறியார்கள் உலக மூடர்;
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
      தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்;
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்
      வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்
      நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே.

..................................................................................................................................

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
      காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
      விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
      குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
      நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;

..................................................................................................................................

ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்
      உத்தமனே பதினாறும் பதியே யாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்
      வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்
      தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்
      அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே.

..................................................................................................................................

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
      பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
      கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
      தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
      சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே.

..................................................................................................................................

ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு
      உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி
      நாட்டாமற் சொன்னதனால் ஞான மாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
      பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்;
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா
      தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே.

..................................................................................................................................

உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே
      உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே;
பகைமை பண்ணிக் கொள்ளாதே; வீண்பே சாதே
      பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே
      நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று
      தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே!

..................................................................................................................................

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
      வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
      தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
      பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
      கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.

..................................................................................................................................

உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
      உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
      உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
      உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
      உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.

..................................................................................................................................

பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
      பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
      விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
      மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
      பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே.

..................................................................................................................................

கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
      காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
      மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
      சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
      தாயான வத்துவென்றும் பதியின் பேரே.

..................................................................................................................................

பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
      பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
      பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
      சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
      நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;

..................................................................................................................................

பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
      பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
      விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
      காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
      சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.

..................................................................................................................................

0 comments:

Post a Comment