Thursday, 19 December 2019

அகஸ்தியர் ஞானம் - 1

ஞானம் - 1
..................................................................................................................................

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
      சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
      பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
      பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
      சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.

..................................................................................................................................

மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
      மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
      காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
      பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
      என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.

..................................................................................................................................

பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
      பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
      வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
      தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
      ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!

..................................................................................................................................
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
      உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
      பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
      தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
      வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.

..................................................................................................................................

தானென்ற தானேதா னொன்றே தெய்வம்
      தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
      நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா
      கோடானு கோடியிலே யொருவ னுண்டு,
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
      என்மக்காள் நிலைநிற்க மோட்சந் தானே.

..................................................................................................................................

மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
      முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு
      எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு;
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
      பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்;
கூச்சலது பாளையந்தான் போகும் போது
      கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.

..................................................................................................................................

மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்
      மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்;
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
      வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்;
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
      வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே;
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
      அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே;

..................................................................................................................................

பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
      படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
      வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
      ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
      குணவியவா னானக்காற் சத்திய மாமே.

..................................................................................................................................

சத்தியமே வேணுமடா மனித னானால்
      சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே;
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
      நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே;
புத்திகெட்டுத் திரியாதே; பொய்சொல் லாதே
      புண்ணியத்தை மறவாதே; பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கி யாதே
      கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.

..................................................................................................................................

0 comments:

Post a Comment