Monday, 2 July 2018

தேரையர் காப்பியம் - மிளகு கற்பம்


தேரையர் காப்பியம்
மரிசமொவ் வொன்றொரு வார மட்டதிக
      வரிசையாய்த் தினமும்மோர் மண்டங் காலமே
யுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்
      கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனே
யுண்டிடத் தொனிதரு மோதுமிப் பொருளொடக்
      காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும தொன்றையுங்
      குடிநீ ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட் டோடுமே.

மிளகு கற்பம்
மிளகை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் கற்ப முறையில் உண்ணவும். முதல் வாரம், முதல் நாள் 1 மிளகு, இரண்டாவது நாள் 2 மிளகு, மூன்றாவது நாள் 3 மிளகு என்று உயர்த்தி சாப்பிட வேண்டும். மறுவாரத்தில் உயர்த்திய ஏழு எண்ணிலிருந்து குறைத்து அதாவது 7, 6, 5 என குறைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டு வந்தால் உடல் ஒளியும், வலிமையும் உண்டாகும். நன்கு பசி ஏற்படும். மேலும் மிளகுப் பொடியை நெய்யுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கப் பெற்று குரலினிமையடையும். சிட்டிகை அளவு மிளகுப் பொடியுடன் போதுமான சர்க்கரையை சேர்த்துக்குழைத்து சாப்பிட்டால் கடும் பசி ஏற்படும். பித்தம் சார்பான நோய்கள் நீங்கும். மிளகைக் குடிநீராகக் காய்ச்சிப் பருகி வந்தால் முக் குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்கும். 

0 comments:

Post a Comment