சித்தர்களின் கொள்கைப்படி, ஈசனை (உயிரை) வணங்குவது - சிவபூசை எனவும், ஈசுவரியை (வலிமையை) வணங்குவது - சக்தி பூசை எனவும், இருவரையும் ஒருங்கே வணங்குவது சிவசக்திபூசை எனவும் கூறப்படும். உலகின் அனைத்துத் தோற்றத்திற்கும் - இயக்கதிற்கும் ஆதாரமாகவுள்ளது. விந்து-நாதமே என்ற தத்துவத்தைக் குறிப்பதற்கே, ஆண்-பெண் குறிகளின் இணைப்புத் தோற்றமாக இலிங்கம் வடிவமைக்கபட்டுள்ளது. இலிங்கம்-கல்லினால் குழவியைப்போல் செய்து மேற்பக்கம் உருண்டையாகவும், அடிப்புறம் யோனியென்ற பீடத்தில் பொருந்தியதாயுமிருக்கும். எனவே, இலிங்க பூசையிலேயே, சக்தி பூசையும், அடங்கியுள்ளது. ஆண், பெண் இரண்டையும் குறிப்பதாகிய இதனை ஆவுடையார் எனவும் கூறப்படும். மேலே, நீண்ட இலிங்கமும், அதனைத் தாங்குவதாகிய யோனிவட்ட வடிவினாலான சக்திபீடமும் அடங்கிய இவற்றையே, சிவாலயங்களின் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சபூதங்களையும் குறிக்கக் கூடிய இலிங்கமானது, ஆதார-பிராண-சிவ-மூல-பார்த்திவ-பாதாள-ஆவுடையார் இலிங்கங்கள் எனப் பலவகையாகக் கூறப்படும். ஆயின், ஆகமவிதிப்படி ஐவகையாகக் கொள்ளப்படும். அவை
- பெண்லிங்கம் - இது, இருபாலரின் குறியும் இணந்தது. இது பொது வழிபாட்டிற்கும் முதல் நிலையாகிய சரியைக்கும் உரியது.
- பூலிங்கம் - இது, ஆண்லிங்கமாகும், இது, உண்மை, சக்தியைக் கண்டறிய வழிபடும், இரண்டாம் நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது.
- நபும்சக லிங்கம் - இது, இரண்டிலும் சேராது. இது, இருண்ட நடுநிலையான, மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையிலுள்ள வழிபாடாகும்.
- பரம லிங்கம் - இது மிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும். இது, மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது.
- மகா லிங்கம் - இது, அறிவு ஒளியானது. இது, பிறப்பை மறுத்து, பரம் பொருளை அடைவதற்குரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது.
இவ்வகை, இலிங்கங்களையும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் பிரித்து, பின் வரும் இடங்களில் நிர்மாணித்துள்ளனர். அவை, பிருதிவி லிங்கம் - காஞ்சிபுரம், அப்பு லிங்கம் - சம்புகேசுவரம் (திருவானைக்காவல்), தேயுலிங்கம் - திருவண்ணாமலை, வாயுலிங்கம்-காளத்தி, ஆகாயலிங்கம் - சிதம்பரம் (சிதம்பர ரகசியம்) ஆகியனவாகும். இவ்வகை இலிங்க வழிபாடு யாவுமே, சீவ-சக்தியின் வலிமையையும், உண்மையையும் உலகிற்கு உணர்த்துவதற்கும், மேனிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கப்பட்டவையே தவிர வேறில்லை. வினாயகர் உருவ அமைப்பிலும், ''ஓம்'' என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமமும் இதுவேயாகும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam