சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவம் ஆகும். சித்தர்கள் தங்கள் ஞான அறிவின் பயனாக உருவாக்கிய மருத்துவமாகும். இந்த மருத்துவம் ஒவ்வொரு இடத்திற்கேற்ப தட்பவெப்ப நிலையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல்பூண்டுகள், செடிகொடிகள், பழங்கள், விதைகள், பிசின்கள், வேர்கள் ஆகியவற்றைக் கொண்டு தைலங்கள், கஷாயங்கள், செந்தூர பஸ்பங்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்து நோய்களை சிகிச்சை அளிக்கும் முறையே சித்த மருத்துவம். அதன்பின் வர்மத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் செலுத்தினர். அதாவது உடம்பைத் தொட்டுப்பார்த்து சிகிச்சையளிக்கும் முறையை உருவாக்கினர். அதுதான் வர்மக் கலை.
வர்மக்கலைக் கற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடடவர்களாக, அசாதரண சக்தி பெற்றவர்களாக ஆக்குகிறது. யோகநிலை, ஞானநிலை, தவநிலை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டவர்கள் சித்தர்கள். இந்த மூன்று நிலையில்தான் அவர்களால் வர்மங்களில் உள்ள உயிர்நிலைகளின் ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. சித்தர்கள் எழுதிய வர்மநூல்களை வெளிநாட்டார் அவர்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்று அங்கு அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற சிகிச்சை முறைகளை வளர்த்தனர். ஆனால் நம் நாட்டிலோ வெள்ளையர் ஆட்சியின் காரணமாக இத்தகைய மருத்துவக் கலைகள் வளராமல் ஒடுக்கப்பட்டன. நேரடியாக வெள்ளையராட்சி இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமே இக்கலை பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
வர்ம மருத்துவம் மிக சிறந்த மருத்துவமாக விளங்கியதால் அது பழங்காலத்தில் அரசர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள், தனவந்தர்கள் போன்ற மேட்டுக் குடிவாசிகளுக்குதான் பயன்பட்டு வந்தது. சித்தர்கள் வாழ்ந்த மலைகளையும், குகைகளையும், காடுகளையும் தேடி அரசர்கள் வந்ததுண்டு. அரண்மனைகளில் வர்மக்கலை மருத்துவர்களுக்கு அரச மரியாதை செலுத்தப்பட்டது. அரசமுத்திரை வழங்கப்பட்ட அவர்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வர்மக்கலை என்பது இரகசியமான சில குடும்பங்களுக்கு முன் மட்டுமே வைத்து காப்பாற்றப்பட்டது. நமக்கு தெரிந்த எந்தவொரு மன்னனுக்கும் ஊனக்குழந்தை பிறந்ததாக வரலாறு இல்லை.










