ஒருவன் பொன் செய்யும் வித்தை எனக்கூறப்படும் வாதமுறையில் வெற்றி பெற வேண்டுமாயின், எப்படி ஒருவன் பிறவி வைத்தியனாக இருக்கின்றானோ, அதுபோல் - பிறவி வாதியாகவும் இருப்பதோடு, ஆத்தும ஞானமுடனும் திகழ வேண்டும். அவன் பூர்வகருமப்படி, பிறக்கும்போது கிரகங்கள் சரிவர அமைந்திருக்கவும் வேண்டும். உடலும் - மனமும் எவ்விதக் குற்றமுமின்றி பரிசுத்தமாயிருந்தால்தான் வாதம் சித்தியாகும் முப்பு என்பதின் ஆதிமூலப்பொருள் தான் ஆத்துமாவிள்ளது. எனவே, வாத நூல் என்பதின் ஒரு பகுதிதான் மானத இரசாயனமாகும். வாதத்தை இலாபம் கருதிச் செய்யலாகாது. இங்ஙனமே, மாயவித்தை எனப்படும் மாந்திரீகம் ஆதிசித்தர் காலம் முதல் தொன்றுதொட்டு வருவதாகும். இதனால், கண்ணுக்குப் புலப்படாத இரகசியமான சக்திகளைக் கொண்டு, வெளிப்படையாகத் தோன்றக்கூடிய செயல்களைப் புரியலாம். மனோசக்தியின் வலிமையினால் ஒருவரையும் அவரது சுற்றுப்புறத்தையும், மின் சக்தியைப் போல் கவர்ந்திழுக்கலாம். மதச்சடங்குகளின் அடிப்படையும் இதுவேறாயினும் - வேறு தந்திரச் சடங்குகளுடன் இதனை ஒப்பிடக்கூடாது. இதனால் - பிணிகளைக் களைதல், எதிர்கால நிகழ்வுகளைக் கூறுதல் முதலிய நற்செயல்களை மட்டுமின்றி - பில்லி, சூனியம், வசியம், ஈடு போன்ற தீச் செயல்களையும் செய்யலாம். சித்தர்கள் விளையாட்டாகச் செய்யும் அற்புதங்களும் மாதவித்தையாகவே கொள்ளப்படும்.
உலகின் மனிதகுலத்திற்கென ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளவை பற்றியும் - அவர்கள் எவ்வித இடையூறுமின்றி உயிர் வாழுவதற்குரிய வசதிகளைப் பற்றியும் சித்தர்கள் கொண்ட கருத்துக்களாவன.
1. உலகின் மனித குலத்தோற்றம்
குலத்தோற்றமும் - வாழ்வும் - பிணிகளும் - மருத்துவக் கொள்கையும் முக்காலத்திலும் ஒன்றேதான். காரணம், படைக்கும் காலத் தொடக்கம் முதல், தனிப்பட்ட முறையில் மானுடப் போக்கும் - ஒழுங்கும் இறைவன் வகுத்தவாறே உள்ளது - இனியும் அப்படியேதான். எவ்வித மாறுதலுமின்றியே இருக்கும். மனிதன் தோன்றியபோதே மருந்துகளும் உண்டாகிவிட்டன.
2. அண்டமே பிண்டம் - பிண்டமே அண்டம்
மனிதனே உயிரினங்களுள் மேம் பட்டவன். பிறவற்றில் காணப்படாத தேர்ந்த பேரறிவு இவனுக்கு மட்டுமேயுண்டு. இவன் தன்னுள்ளிருக்கும் அண்டத்தை ஆகாயத்தின் ஒரு பகுதியாகப் பெற்றுள்ளான். எனவே, நவக்கிரகங்களும் - பஞ்ச பூதங்களும் அதனதன் வலிமையை அவனுள் செலுத்துகையில், அதன் இயற்பிற்கேற்ற நல்ல - தீய பலன்களை அடைகின்றான். உலகைக்காக்கும் தேவதைகளின் இயல்பினால், இயற்கையில் கேடுண்டாயின் பெருவாரி முதலிய தொற்று நோய்கள் கண்டு, அதனாலான நச்சுத்தன்மை மனிதனையும் தாக்கும். ஆத்ம கோளத்தினுள் உள்ள தொற்றுக் கிருமிகளால் காரணமுண்டாகி இயல்பான சூக்குமக் காரணங்களை அனுசரிப்பின், கொள்ளை நோய்கள் ஏற்பட்டு அழிவுகள் ஏற்படும். மேலும், மனிதனின் குருதி - செவ்வாயையும், ஆத்தும நிலைகள் - சுக்கிரனையும் தழுவி நிற்கும். உயிரினத்துக்கு சுக்கிரனின் தொடர்பில்லாவிடில் இனவிருத்திக்கு எதுவான காம விச்சையே ஏற்படாது. இருபாலருக்கும் ஏற்படும் காம நட்புக்கு சுக்கிரனின் அம்சம் அவசியம் தேவை.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment