நவீன ஆய்வாளர்கள், சித்த மருத்துவம் முதற் சங்க காலமாகிய 10000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதெனவும்-மற்றும் சிலர் வடக்கிலிருந்த ஆரியர் தென்னகத்தில் குடியேறுதற்கு முன்பே, அதாவது 27000 ஆண்டுகட்கு முன்னரே நாடெங்கும் பரவியிருந்தது எனவும் கூறுகின்றனர். மேலும், ஆயுள் வேதத்தின் அடிப்படை நூற்களான அஷ்டாங்க ஹிருதயம்-கி.பி. 900, சாரங்கதர சம்ஹிதை - கி.பி.1300, பரப்ப பிரகாசம் - கி.பி. 1600, கிரேக்க வைத்தியம் - கி.பி. 900, அலோபதி வைத்தியம்-கி.பி.1757, உரோமர் வைத்தியம் - கி.பி. 300, யூனானி வைத்தியம் - கி.பி. 600, ஆகிய காலங்களில் தோன்றியதாகக் கூறுவர். மேலும் தமிழ் மருத்துவத்தின் கோட்பாடுகளை மற்றவர் நன்கு புரிந்து கொள்ளாத நிலையிலும் கூட கிரேக்க, உரோம, அரேபியராலும் ஏன், கி.பி. 1800 முடிய ஐரோப்பிய வைத்தியர்களாலும் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதையும், நமது மருத்துவ முறைகளும், பொருட்பண்பு விரிவுரைகளும், அறுவைச் சிகிச்சை முறைகளும், கிரேக்க, உரோம, அராபிய, ஹீப்ரு, சீன, பாரசீக, தீபத்திய நாடுகளின் வைத்திய சாத்திரங்களிலும், நவீன ஐரோப்பிய முறைகளிலும் கூட இணைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
இந்தியாவில் கிட்டும் பலவகை மருந்துப் பொருட்களும் மற்ற நாட்டு மருத்துவ சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளதையும் அறியவும். இவையன்றி 2000-ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது குறளில் மருத்துவத்துக்கு தனியாக ஒரு அதிகாரம் வகுத்துள்ளதையும், சித்த மருத்துவத்தின் தத்துவங்களின் வாதம் (வளி), பித்தம், கபத்தைக் குறிப்பிடுமளவில் மிகினும் குறையினும் நோய் செய்யு நூலோர் வளி (வாயு) முதலாவெண்ணிய மூன்று என்ற குறட்பாவை இயற்றியதினின்றும் அந்நாளிலேயே சித்த மருத்துவம் சிறப்புற்றிருந்ததை அறியலாம். எனவே, எங்ஙனம் நோக்கினும் தேவர்கட்கு ஒப்பாகக் கூறவல்ல-மற்ற முறைகளிலெல்லாம் கையாளாத பல சிறப்பு முறைகளைக் கொண்ட சித்த மருத்துவமே உலகில் தொன்மையானதும், மேன்மையானதும் என்று உணர்ந்து கொள்ளலாம்.
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment