மனிதனுக்கு ஏற்படும் கேடுகளை நீக்கி, நலமுண்டாக்கி ஆயுளை நீடிக்கச் செய்வதற்கென தென்மொழியாகிய தேன் தமிழில் சிவபெருமான் உமையவளுக்கும்-அவள் நந்திப் பெருமானுக்கும்-அவர் தன்வந்திரிக்கும்-அவர் அச்சுவனித் தேவர்களுக்கும்-அவர்கள் விரிந்த அலைகளையுடைய கடலையுண்ட அகத்தியப் பெருமானுக்கும்-அவர் புலத்தியர்க்கும்-அவர் தருமசெளமியருக்கும்-அவர் தேரருக்கும்-அவர் தம் வழிவந்த ஏனையர்க்கும் இயம்பியதாகக் கூறப்படுகிறது. (இதுவன்றி வேறு சில பரம்பரைகளையும் கூறியுள்ளனர்). மேலும் மருத்துவ நூற்களை எழுதிய பெரியார்கள் தங்கள் வழிபடு கடவுளை வணங்கி மருத்துவப் பரம்பரையைக் கூறுகின்றனர். அதாவது அவர்கள் மருத்துவ நூற்களை எவ்வாறு அடைந்தனர் என்பதை சுருக்கமாக இயம்பியுள்ளனர். வடமொழி (சமசுகிருதம்) நூற்களை எழுதியவர்கள் வாக்படர், அச்சுவினித் தேவர் ஆகிய இருடிகளிடம் இருந்து தன்வந்திரி பகவான் மூலம் ஆயுர்வேதம் வந்தது எனவும், தென்மொழி (தமிழ்) நூற்களை எழுதியவர்கள், அவை பரமசிவனிடமிருந்து, நந்தி வழியாகவும், அவரிடமிருந்து அகத்தியர்-புலத்தியர் முதலிய சித்தர்கள் வழியாகவும் சித்த மருத்துவம் கிடைத்தது எனவும் கூறியுள்ளனர்.
அன்பர்களே, இயற்கை-செயற்கை ஒழுக்க வழிகளில் பயின்ற இக்காலத்தவராகிய நமக்கு இது ஒரு புதுமையாகவே தோன்றும், ஏனெனில், உருவமாகவும், உருவமின்றியும் எங்கும் நிறைந்தவராயிருக்கும் கடவுளிடத்திலிருந்தும், தேவர்களிடத்திலிருந்தும் அக்காலத்தில் இம்மருத்துவ நூல்கள் தோன்றின என்றும், இக்காலத்துப் பெரும்பாலும் சிதலுக்கு இரையாகிய அம்மருத்துவ நூற்களையெல்லாம் மீண்டும் அப்பெரியார்கள் ஏன் நமக்கு அளிக்கலாகாது? என்றும், மேற்கூறிய கடவுளிடத்திலிருந்து எங்ஙனம் இந்த வைத்திய நூற்கள் உண்டாகக்கூடும்? என்றும், இவை நவீன ஆய்விற்கொப்ப உள்ளனவா? என்றும், இவை நவீன ஆய்விற்கொப்ப உள்ளனவா? என்றும் கேட்க வழி ஏற்படுதலின், இவையெல்லாம் புராணக்கதை என்றே எண்ணுவதற்கு ஏதுவாகின்றன. ஆயினும் மருத்துவத்தில் மிக்க தேற்சி பெற்று, நன்முறையில் ஒழுகி, மேன்மையுடன் புகழ்பெற்று வாழ்ந்த பெரியோர்களைக் கடவுளைப் போன்றே போற்றி வாழ்தல் தமிழ் மக்களின் இயல்பாதலை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே அக்காலத்தில் மிக்க கீர்த்தியுடன் வாழ்ந்த மருத்துவப் பெரியோர்களைக் கடவுள் என்றே மதித்துக் கூறியதாக கொள்வோம். (மருத்துவ நூற்களை மட்டுமின்றி, ஏனைய தமிழ் நூற்களும் தேவர்களிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெற்றனவாகும் என்று கூறப்படுவதையும் நாம் அறிவோம்.) மற்றும், மூலிகை வகை முதலியன சித்தர்களிடம் தத்தமக்கு உரிய பண்பு-குணநலன்கள்-வீரியம் முதலியன பற்றி தாமே எடுத்து கூறிப்பயனுறச் செய்ததாகவும், பறவை இனம், மிருகங்கள், முதலிய தத்தமக்கு நோயுற்றபோது அவற்றினின்றும் விடுபட உட்கொண்ட மூலிகை முதலியவற்றைக் கண்டறிந்து மாந்தன் மருந்துகளைக் கண்டறிந்தான் என்றும் கூறுவதுமுண்டு-நமது சித்தர்களின் பண்டைய முறையிலுள்ளவற்றையே, புதிய பெயரில் இன்றைய நவீன ஆய்வாளர்கள் கூறுகின்றனரேயன்றி, புதியதாக எதையும் கூறிவிடவில்லை.
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment