Thursday, 22 March 2018

சித்தர்கள் பற்றிய விபரம்



சிவனே சித்தன் என்றும் அவர் தம்வழி மரபினரே தமிழ் மக்கள் எனவும் கூறுவது உண்டு. சித்தர்கள், பொய்ப்பொருளுக்கு மெய்பொருள் கண்டுணர்ந்தோராவர் - வாயு - மனோவேகத்தில் திசைகளும் திகந்தங்களும் சுற்றி வருவோர் - மேருமுதல் துருவம் முடிய சுற்றும் பரிதியென விளங்குவோர் - எழுகடலையும் தம் அங்கையில் ஏந்திப் பருக வல்லோர் - பரிதி, மதி, வையம் இவற்றை குடுகுக்குள் காட்ட வலியோர் - பாரினில் கற்பக மரத்தையும் உற்பவிப்போர் - கலையையும், செல்வத்தையும் இரு பணியாளராக்குவோர் - கேட்டது கொடுத்துவர நிற்க வைப்போர் - பரந்த நீர்ப்பகுதியையும் ஒரு கேணியில் குறுக்குவோர் - உற்பத்தியாளனையும் உலகையும் போகனு பவத்தில் உறங்குவிப்போர் - பஞ்சப் பொருட்களும் ஒன்றிலொன்று ஒடுங்குகையில் பரவெளியில் வெளியாகுவோர் - பிரளயத்தில் நீரில் வாழும் வண்டெனத்துவண்டு சிவயோக நிலை நிற்போர். நெடிய முகிலேழும் பரந்து பெய்கின்ற காலை நிலவின் நடுவில் ஊரென விளங்குவோர். பெரும் புயலில் மேருவென அசையாதிருப்போர் - இரவு பகலற்ற இடத்திலிருப்போர் - சாகா நிலைதனில் சாகாதிருப்போர் - புசிப்பிற் கலைந்திடார் - ஓட்டினையெடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவோர். இத்தகு சிறப்புமிக்க சித்தர்களால் வாதம், வைத்தியம், யோகம், மந்திரம், கணிதம், வின்வெளி ஆய்வு உட்படக் கூறாத பொருள் ஒன்றில்லை. மேலும் சித்தர்கள் என்பவர்கள் சித்தத்தில் சிந்தித்தப்படியே உடலும், உண்பனவும் பெற்று அனுபவிக்கின்றவர்களாகும். இவர்கள் சிவநெறியைப் பூண்டு ஒழுகிய சித்தசமயத்தைச் சார்ந்த தமிழ்மக்களாகும். சிவநெறியிலுள்ள கிரியைகளையும், விதிகளையும் விலக்கிவிட்டு ஆத்மஞானம் ஒன்றையே கடைப்பிடித்தவர்கள். காரணகாரியங்களால் உடலைச் சோதித்து, எவ்வவற்றால் உடல் வளர்ந்து - அழிகின்றது என்பதை கடும் முயற்சியால் கண்டறிந்து, பொய் என்று சோல்லும் உடலை மெய் என்றாக்கி, அட்டமா சித்திகளையும் அடைந்தவர்கள். தமது உடலை தக்கபடி பலப்படுத்திக் கொண்டால் பிறப்பிறப்பினின்று நீங்கி விடலாம் என உணர்ந்து, பல்லாண்டு வாழும்  நித்திய வாழ்வைப் பெற்ற மகான்கள் கல்பமுறையிலும், யோக சாதனையிலும் அபாரசக்தி பெற்றும் - அழியும் உடலைக்கொண்டே, ஞான சக்தியால் மோட்ச சாதனை வழியைத் தேடுபவர்கள். உலோகங்களாலும், மந்திர சக்தியாலும் சுகனக்குளிகை கொண்டு பற்பல அண்டங்களையும் சுற்றி, ஆங்காங்குள்ள அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்தவர்கள். தங்களது மாமிச உடலை இலிங்கவடிவாக மாற்ற வல்லவர்கள். மனோசக்தியால் மருந்து கொள்ளாமலேயே உடலின் அணுவாதி தத்துவங்களை பிணியும், மரணமும் நீக்கவல்லவர்கள் - மனோசங்கற்பத்தினாலான மனோசக்தியை, நினைத்தபடி நாடி வழியாக செலுத்தாமலே, மின் சக்தியைப் போல் திக்கெங்கும் நடப்பவற்றை அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்து கொள்ளவும், எங்கேனுமுள்ள எவருடனும் பேசும் திறனும் படைத்தவர்கள்.

வடமொழியில் புகழப் பெற்றுள்ள - வாதவித்தையில் மட்டும் ஈடுபட்ட சில இரசாயன சாஸ்திரிகள், ஆத்ம ஞான சித்தி பெற்ற சித்தர்களுக்கு இணையாக மாட்டார்கள். ஆயின் வாதமுறையிலும் சிறுது ஞானம் அடையலாம் என்பதும் சித்தர்களின் கருத்தாகும். எனினும், சித்தர்கள் வாத - வைத்திய - யோக - ஞான - வழிகளில் சித்தியடைந்தும், உடல் அழியுமுன்னரே முக்தியடைய ஏதுவான சித்திகைளப் பெறுதல் அவசியமென்றும், உடல் அழிந்தால் பிறகு முக்தியடைய பல பிறவிகளை அடைய வேண்டுமென ஊகித்தறிந்தும் யோகவழியைக் கடைப்பிடித்தவர்களாகும். அதற்கு காயகல்பமும், அட்டசித்தியும் அவசியமெனக் கண்டறிந்தவர்கள். வாத - வைத்தியத்தில் ஈடுபட்டும், யோக - ஞான வழியில் கண்ட தங்களது அனுபவத்தையும், ரகசியங்களையும், அற்புதங்களையும் தங்கள் நூற்களின் மூலம் உலகிற்கு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். இன்றைய தமிழ் மருத்துவத்திற்கே காரண கர்த்தாவாகிய யாவரும் பயன் படுமாறு தூய தமிழில் செய்யுள் வடிவில் பாடிவைத்த மகான்களாகும். இவர்களது எண்ணிக்கை 7-8 லட்சம் எனப்பலவாறாகக் கூறப்படும். சித்திர்களின் வழி காட்டலினால் தான் இவ்வுலகமே இயங்கிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.



Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:

Post a Comment